தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கட்சிகள் பணப்பட்டுவாடா: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் பகிரங்க குற்றச்சாட்டு!
புதுச்சேரி:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் முறைகேடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சலீம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்த இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய அனைத்து பிரதான கட்சிகளுமே வாக்காளர்களுக்கு தாராளமாகப் பணப்பட்டுவாடா செய்துள்ளன. தேர்தல் அதிகாரிகளாலும் பறக்கும் படையினராலும் இதுவரை ரூ.6 கோடியே 48 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண பலமும் பரிசுப் பொருட்களுமே இந்த இடைத்தேர்தலின் பிரதான அடையாளமாக மாற்றப்பட்டுள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்புமே ஜனநாயக நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, பண பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளதாகக் கடுமையாகச் சாடினார். தேர்தல் ஆணையமும் காவல்துறையும் தீவிர சோதனைகள் நடத்திய போதிலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தட்டாஞ்சாவடி தொகுதியில் நடந்த முறைகேடுகளின் தீவிரத்தை வெளிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் அருகே குறிப்பிட்ட சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுச்சீட்டுகள் வீசப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்வைத்துள்ள இந்த பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
