புதுச்சேரி

ஆளுநர் அதிகாரத்தால் ஏற்படும் சங்கடங்களுக்கு மாநில அந்தஸ்தே தீர்வு: முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி, ஆக. 27: துணைநிலை ஆளுநரின் அதிகார வரம்புகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் ஏற்படும் சங்கடங்களுக்கு மாநில அந்தஸ்து பெறுவதே ஒரே தீர்வு என்று முதல்வர் என். ரங்கசாமி சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் போதெல்லாம் இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கோரிக்கையை மத்திய அரசிடம் தீவிரமாக வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான அதிகாரம் கிடைத்து மக்கள் நலத்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும் என்றார். இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன