புதுச்சேரி ராஜ் பவன் தொகுதி மழை வெள்ள பாதிப்பு: துணைநிலை ஆளுநரிடம் விக்னேஷ் கண்ணன் நேரில் மனு!

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ் பவன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வலியுறுத்தி, துணைநிலை ஆளுநரிடம் விக்னேஷ் கண்ணன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தொகுதியில் நிலவும் அவசர மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறிப்பாக, அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ராஜ் பவன் தொகுதிக்குட்பட்ட ஹெரிட்டேஜ் டவுன் உள்ளிட்ட முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான இன்னல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து மனுவில் விரிவாக விவரிக்கப்பட்டது. மழைநீர் நீண்ட நேரம் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு, சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் தொடர்கின்றன. இதனால் மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடராமல் நிரந்தர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் வாயிலாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகால மீட்புப் பணிகள் பல்வேறு தொகுதிகளில் முடுக்கிவிடப்பட்டு வரும் நிலையில், நகரின் இதயப் பகுதியாக விளங்கும் ராஜ் பவன் தொகுதியிலும் வடிகால் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற இக்கோரிக்கை பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.