தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து புதுவையில் தேசியக்கொடி ஏந்தி பேரணி: 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கண்டனம்!
புதுச்சேரி, அக். 23: இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணியால் நாடு முழுவதும் சுமார் 13 கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழந்துள்ளதாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையரைக் கண்டித்து புதுச்சேரியில் தேசியக்கொடி ஏந்தி கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சக தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களைக் கேட்காமல் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு இந்நடவடிக்கையை மேற்கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக ‘அகில இந்திய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்துக்கு எதிரான மக்கள் மேடை’ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும் மக்கள் மேடை அமைப்பு சார்பில் புதுச்சேரி காமராஜர் சிலை சதுக்கத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவீன்குமார் இதற்குத் தலைமை வகித்தார்.
இப்பேரணியில் நாரா.கலைநாதன், சீனுவாசன், அந்தோணி, அன்புமணி, தமிழ்ச்செல்வன், அன்பரசன், கிருஷ்ணமூர்த்தி, ஹேமலதா, இளவரசி, சரவணன், எழிலன், சஞ்சய்சேகரன், முரளி, அரிகிருஷ்ணன், தமிழ்வாணன், லோகு அய்யப்பன், சுவாமிநாதன், முருகானந்தம், மங்கையர் செல்வன், நடராஜன், விநாயகம், பாலசுப்பிரமணியன், கமல வேலன், அழகர், பஷீர் அகமது, சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
காமராஜர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணா சாலை, அஜந்தா சந்திப்பு, எஸ்.வி. படேல் சாலை வழியாக மிஷன் வீதியை அடைந்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பேரணியைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கேயே தேசியக்கொடிகளை ஏந்தியபடி மத்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

