உருளையன்பேட்டை பெண் வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது நடவடிக்கை எடுக்க நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த பெண் வியாபாரிக்கு நேர்ந்த அநீதி தொடர்பாக, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவருக்கு அவர் விரிவான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வரும் பெண் ஒருவர், அதிகாலை வேளையில் பாரதி வீதி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப்பட்டு பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிச் சம்பவம், அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியது. ஆனால், பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அரசு நிர்வாகத்தின் சார்பில் இதுவரை உரிய நிவாரணமோ அல்லது முறையான உதவிகளோ வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி பொதுமக்களுடன் இணைந்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது அங்கு வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் இச்சம்பவம் குறித்து மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டதால், அதுகுறித்து அவரிடம் நியாயம் கேட்டு விவாதித்தேன். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் சில மீனவ சமுதாயப் பிரதிநிதிகளைத் தூண்டிவிட்டு தனக்கு எதிராகத் திட்டமிட்டுப் போராட்டங்களை நடத்தச் செய்ததாகவும், அந்தப் போராட்டத்தின் போது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் நேரு எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகக் குரல் கொடுத்துப் போராடிய தன் மீதும், பொதுமக்கள் மீதும் காவல்துறையினர் உடனே வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தூண்டுதலாக இருந்த அமைச்சர் மீதும் தனக்கு எதிராகப் போராடியவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

