புதுச்சேரியில் SC/ST மாணவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் கூடிய இலவச கணினி பயிற்சி: விண்ணப்பிக்க செப். 25 கடைசி நாள்!

புதுச்சேரி, 18/09/2026: புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்.சி./எஸ்.டி. தேசிய தொழில் சேவை மையம் (NCSC for SC/STs) சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான இலவச மற்றும் உதவித்தொகையுடன் கூடிய ஓராண்டு தொழில்பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ‘ஆபீஸ் ஆட்டோமேஷன் அக்கவுண்டிங் அண்ட் பப்ளிஷிங் அசிஸ்டென்ட்’, ‘கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிசினஸ் அக்கவுண்டிங்’ மற்றும் ‘சைபர் செக்யூர்டு வெப் டெவலப்மென்ட் அசோசியேட்’ ஆகிய மூன்று முக்கிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சிகள் அனைத்தும் வரும் அக்டோபர் 1, 2026 முதல் தொடங்கப்பட உள்ளன. பயிற்சியில் இணையும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை (Stipend) வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர 01.09.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு பயிற்சிப் பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ள எஸ்.சி./எஸ்.டி. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதுச்சேரி சுதேசன் நகர் 3-வது குறுக்குத் தெரு, எண் 5 (முதல் தளம்) என்ற முகவரியில் உள்ள தேசிய தொழில் சேவை மையத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 25, 2026 கடைசி நாளாகும். வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நேரில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8870073622, 9629342446 அல்லது 0413-2200115 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என மையத்தின் தலைவர் ரவீந்திர நாத் மொண்டல் தெரிவித்துள்ளார்.

