புதுச்சேரியில் தெருவிளக்குகள் பற்றாக்குறையைப் போக்க ரூ.75 லட்சம் எம்.பி நிதி ஒதுக்கீடு: வெ. வைத்திலிங்கம் நடவடிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் நிலவி வரும் தெரு மின்விளக்குகள் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், மக்களவை உறுப்பினர் திரு. வெ. வைத்திலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் மின் துறையால் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான புதிய எல்.இ.டி (LED) மின்விளக்குகள் தற்போது பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
புதுச்சேரியின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர எரியாததாலும், பற்றாக்குறை நிலவுவதாலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சத்தை மின் துறைக்கு ஒதுக்கீடு செய்து உரிய கொள்முதல் ஆணையை எம்.பி. வெ. வைத்திலிங்கம் பிறப்பித்திருந்தார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், மின் துறையின் மூலமாக 30 வாட் (Watt) திறன் கொண்ட 3,474 எல்.இ.டி தெரு மின்விளக்குகளும், 120 வாட் உயர் திறன் கொண்ட 1,800 எல்.இ.டி மின்விளக்குகளும் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தற்போது இத்தெரு மின்விளக்குகள் அனைத்தும் முழுமையாகக் கொள்முதல் செய்யப்பட்டு புதுச்சேரி மின்துறையிடம் பெறப்பட்டுள்ளன.
பல்வேறு தொகுதிகளின் கள நிலவரம் மற்றும் தேவையின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அந்தந்தப் பகுதிகளுக்கு மின்விளக்குகளைப் பகிர்ந்தளிப்பதற்கான ஒதுக்கீட்டுக் கடிதங்களை மக்களவை உறுப்பினர் திரு. வெ. வைத்திலிங்கம் வழங்கியுள்ளார். மின்துறை அதிகாரிகள் மூலமாக இந்தப் புதிய எல்.இ.டி மின்விளக்குகள் அந்தந்தப் பகுதிகளில் மிக விரைவில் பொருத்தப்பட உள்ளன.
நீண்ட நாட்களாகத் தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கியிருந்த முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கிராமப்புற வழித்தடங்களில் புதிய மின்விளக்குகள் ஒளிரவுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.

