புதுச்சேரி அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: அரசிதழில் அதிகாரப்பூர்வ வெளியீடு

புதுச்சேரி அரசு, அமைச்சர்களின் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி, “புதுச்சேரி மாநில அரசிதழ் — சிறப்பு வெளியீடு” மூலம் இன்று (05.08.2026) வெளியிட்டுள்ளது. லெப்டினன்ட் கவர்னர் உத்தரவின்படி, முதல்வருடன் ஆலோசித்து அமைச்சர்களுக்குக் கீழ்க்காணும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இலாகா ஒதுக்கீடு இல்லாமல் ஆட்சி நடத்துவது குறித்து முன்னாள் நகர் சபைத் தலைவர் பேராசிரியர் ம. ராமதாஸ் எழுத்திய விமர்சனத்திற்குப் பிறகு வெளியான இந்த அறிவிப்பு, ஒவ்வொரு அமைச்சருக்கும் பொறுப்பு துறைகளை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.
முதல்வர் ந. ரங்கசாமி: ரகசிய மற்றும் அமைச்சரவைத் துறை, திட்டமிடல் மற்றும் நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், கூட்டுறவு, வருவாய் மற்றும் வரித்துறை, பொதுநிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலன், இந்து சமய அறநிலையத் துறை, வக்ஃப் போர்டு, உள்ளூராட்சி நிர்வாகம், நகர அடிப்படை சேவைகள், போக்குவரத்து, அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், நகர மற்றும் கிராம திட்டமிடல், தகவல் மற்றும் விளம்பரம், தீயணைப்பு சேவைகள். மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத பிற துறைகளும் முதல்வரின் கீழ் இருக்கும்.
உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம்: உள்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் விலங்குகள் நலன், காடு மற்றும் வனவிலங்கு, மின்வாரியம், கல்வி (கல்லூரிக் கல்வி உட்பட), சட்டத் துறை.
பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்: பொதுப் பணிகள், சுற்றுலா மற்றும் வானூர்தி சேவைகள், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலன், துறைமுகத் துறை, தொழில் மற்றும் வர்த்தகம், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு.
அடிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பி. ராஜவேலு: அடிதிராவிடர் நலன், கலை மற்றும் கலாச்சாரம், வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரங்கள், அலுவலகப் பொருட்கள் மற்றும் அச்சிடுதல்.
நுகர்வோர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் வி.பி. சிவகொழுந்து: உணவுப் பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மை நலத் துறை.
வேளாண்மைத் துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன்: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், விளையாட்டு மற்றும் இளையோர் நலன், நாட்டுப்புற முன்னேற்ற முகமை, சமூக மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, முன்னாள் ராணுவ வீரர்கள் நலன்.
ஒவ்வொரு அமைச்சருக்கும் பொறுப்பு துறைகள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது தேவைகள், குறைகள் தொடர்பாக எந்தத் துறைக்கும் எந்த அமைச்சரை அணுக வேண்டும் என்பதை இந்த அறிவிப்பு எளிதாக்குகிறது.


