புதுச்சேரி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா: மணவெளி அரசுப் பள்ளியில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு!

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளி அரசு தொடக்கப் பள்ளியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உற்சாகமாக நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவை மற்றும் சமூகப் பணிகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். வில்லியனூர் மாவட்ட பாஜக தலைவர் ஓம் அனிதா முன்னிலை வகித்தார். திருபுவனை தொகுதி பொறுப்பாளர் தட்சணாமூர்த்தி மற்றும் வில்லியனூர் தொகுதி துணை தலைவர் சுப்பிரமணி ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை தாங்கி உரையாற்றிய உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், பிரதமர் நரேந்திர மோடி பொதுவாழ்வில் ஆற்றி வரும் 25 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க பணிகள் குறித்தும், நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அமைச்சர் கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஆ.நமச்சிவாயம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் கல்வியிலும் பொது அறிவிலும் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன