புதுச்சேரியில் சோகம்: தொழில் நஷ்டத்தால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
புதுச்சேரி, ஆக. 17: புதுச்சேரி அண்ணா சாலையில் ஓட்டல் நடத்தி வந்த உரிமையாளர், தொழில் நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமுடி நகரைச் சேர்ந்தவர் முகமது நிஜாம் (61). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் ஓட்டல் கடை நடத்தி வந்தார். தொழிலில் தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி காலை எலி மருந்தை உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து, அதே நாளில் மதியம் பழைய துறைமுகம் அருகே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, ஆகஸ்ட் 15-ம் தேதி முகமது நிஜாம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
