சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்: துணைநிலை ஆளுநர் வலியுறுத்தல்
புதுச்சேரி, ஆக. 19: தென் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற மண்டல மாநாட்டில், புதுச்சேரிக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சாத்தனூர் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொதுவான சிக்கல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரியின் நீண்டகால குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். குடிநீர் விநியோகம் என்பது புதுச்சேரியின் மிக முக்கியமான அடிப்படைத் தேவை என்பதால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், புதுச்சேரி மக்களின் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

