சென்னை கமலாலயத்தில் கோலாகலமாக நடந்த ஓணம் விழா: நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் ஓணம் திருநாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாஜக நிர்வாகிகள் மலையாள மக்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் ஒன்றிணைந்து கொண்டாடினர். விழாவையொட்டி அலுவலக வளாகத்தில் வண்ணமயமான பூக்கோளம் அமைக்கப்பட்டிருந்தது, இது நிகழ்விற்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.
நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இயற்கை வளத்தையும் உழவர்களின் உழைப்பையும் போற்றும் அறுவடைத் திருநாளாக ஓணம் திகழ்வதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வசிக்கும் மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செல்வச் செழிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டார்.
இந்தக் கொண்டாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, துரைசாமி மற்றும் மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்பும், ஒற்றுமையும் தழைத்தோங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், கமலாலயத்தில் ஓணம் விழா இனிதே நிறைவுற்றது.



