ராகுல் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு!

புதுச்சேரி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் அரசு உள்நோக்கத்தோடு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை (FIR) உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா. வேல்முருகன் தலைமையில் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காவல் துறை அதிகாரிகளிடம் இந்த புகார் மனுவை நேரில் வழங்கினர். அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர்-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், உண்மையான குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் குமரன், ராஜாராம், உருளையாம்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
