புதுச்சேரியில் தவறவிட்ட ₹80,000 ரொக்கம், செல்போன்: சுற்றுலா மாணவர்களிடம் ஒப்படைத்த கடலோரக் காவல் படையினர்!
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தவறவிட்ட ரூ. 20,000 ரொக்கப்பணம் மற்றும் ரூ. 60,000 மதிப்பிலான செல்போன் அடங்கிய கைப்பையை மீட்டு, உரியவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்த கடலோரக் காவல் படை வீரர் மற்றும் உயிர்காக்கும் வீரர்களின் நேர்மைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் விடுமுறையைக் கழிப்பதற்காகப் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாகத் தங்களது கைப்பையை (Handbag) தவறவிட்டுச் சென்றனர். அந்தப் பையில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள நவீன செல்போன், ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை இருந்தன.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படை வீரர் பிரவீன் மற்றும் லைஃப்கார்டு வீரர்கள் ரமேஷ், விக்ரம் ஆகியோர் கேட்பாரற்றுக் கிடந்த அந்தக் கைப்பையைக் கண்டெடுத்துப் பாதுகாத்தனர். பின்னர், பையிலிருந்த ஆவணங்கள் மற்றும் தொடர்புகளைக் கொண்டு உடனடியாக விசாரணை மேற்கொண்ட வீரர்கள், உடமைகளைத் தொலைத்துவிட்டுத் தவித்துக் கொண்டிருந்த திருப்பூர் கல்லூரி மாணவர்களைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை வரவழைத்து உரிய சரிபார்ப்புக்குப் பின் பணம், செல்போன் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பொருட்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் நிம்மதியடைந்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளை மீட்டு ஒப்படைத்த பிரவீன், ரமேஷ் மற்றும் விக்ரம் ஆகியோரின் முன்மாதிரியான நேர்மையைப் பாராட்டிய கடலோரக் காவல் படை ஆய்வாளர் தியாகராஜன், அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

