புதுச்சேரி சென்டாக்: நான்-நீட் இளநிலை படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – கல்லூரிகளில் சேர செப். 30 கடைசி நாள்!

புதுச்சேரி, 26/09/2026: புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் மத்திய சேர்க்கைக் குழு (சென்டாக்), 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழிற்கல்வி, கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான மாப்-அப் சுற்று தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியலை (Mop-up Round Provisional Allotment List) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர், இறுதி தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் Dashboard Login மூலம் உள்நுழைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரங்களை அறிந்து, ஒதுக்கீட்டு ஆணையை (Allotment Order) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு பெற்ற மாணவ-மாணவியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி முதல்வரிடம் அசல் சான்றிதழ்கள், தேவையான கட்டணம் மற்றும் ஒதுக்கீட்டு ஆணையுடன் நேரில் ஆஜராக வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கான கடைசி நாள் 2026 செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை ஆகும். அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்க்கை நடைமுறைகளை முறையாக முடித்தால் மட்டுமே சேர்க்கை உறுதி செய்யப்படும்.
மேலும், புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய இருப்பிடச் சான்றிதழ் அல்லது சாதிச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்காத மாணவர்கள், தங்களது டேஷ்போர்டில் உள்ள Grievance Attachment வசதியைப் பயன்படுத்தி செப்டம்பர் 30 மதியம் 3:00 மணிக்குள் பதிவேற்றம் செய்து பின்னர் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விளையாட்டு ஒதுக்கீட்டில் (MSP) புதிதாக இடம் பெற்றுள்ள மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக செப்டம்பர் 28 அன்று சென்டாக் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். ஏற்கனவே முந்தைய சுற்றுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் நேரடியாக ஆணையைப் பதிவிறக்கம் செய்து கல்லூரியில் சேரலாம்.
கட்டண விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் உள்ள கையேட்டைப் பார்வையிடலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு 0413-2655570, 2655571 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



