புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து சிறுவன் பலி: அரசு அலட்சியம் என இரா.சிவா கண்டனம்; ரூ.20 லட்சம் நிவாரணம் கோரிக்கை!

புதுச்சேரி, செப். 28: புதுச்சேரி கடற்கரை சாலையில் துருப்பிடித்த மின்கம்பம் சரிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் கடற்கரை சாலையில், பொம்மை விற்றுக் கொண்டிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரின் 5 வயது மகன் முகமது பாசில் மீது மின்கம்பம் விழுந்து பலியானது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எவ்விதக் காற்றும் இல்லாத சூழலில், முறையாகப் பராமரிக்கப்படாத துருப்பிடித்த மின்கம்பம் சரிந்து விழுந்து குழந்தை உயிரிழந்தது மின்துறையின் அப்பட்டமான அலட்சியத்தைக் காட்டுகிறது. இதனை வெறும் விபத்து என்று முதல்வர் கடந்துவிடக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடற்கரை சாலை மட்டுமின்றி புதுச்சேரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும், மின்கம்பங்கள் மீதுள்ள தேவையற்ற கேபிள் ஒயர்கள் மற்றும் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கடற்கரையில் உரிய அனுமதியின்றியும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் இயக்கப்படும் படகு சவாரிகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன