புதுச்சேரி சென்டாக்: நான்-நீட் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!
புதுச்சேரி, 07/09/2026:
புதுச்சேரி அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மத்திய சேர்க்கைக் குழுவான சென்டாக் (CENTAC), நடப்பு 2026–2027-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை நான்-நீட் (UG Non-NEET) தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்புகளுக்கு புதிய விண்ணப்பப் பதிவை மீண்டும் தொடங்கியுள்ளது.
பிளஸ்-2 துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற (H.Sc. Supplementary) மாணவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, இதுவரை சென்டாக் மூலம் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு இந்த இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 06.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியுள்ளதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 08.09.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய விண்ணப்பப் பதிவின் போது பாடப்பிரிவு விருப்பத் தெரிவுகள் (Course preferences) தற்போது அனுமதிக்கப்படாது என்றும், இதற்கான தனியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதால் மாணவர்கள் சென்டாக் இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது மாணவர் லாகின் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும் உதவி எண்களான 0413-2655570, 2655571 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



