புதுச்சேரி சென்டாக் முதுநிலை பல் மருத்துவம்: கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு; புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி, 18/10/2026: புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய சேர்க்கைக் குழு (சென்டாக்), முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான (MDS) கட்-ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, தகுதிபெற்ற புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு வாரியத்தின் (NBE) வழிகாட்டுதலின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் அறிவிக்கையின்படி எம்.டி.எஸ் படிப்புகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (General/EWS) கட்-ஆப் 50-வது சதவிகிதத்தில் இருந்து (308 மதிப்பெண்கள்) 29.424 சதவிகிதமாக (234 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 45-வது சதவிகிதத்தில் இருந்து 24.424 சதவிகிதமாகவும் (218 மதிப்பெண்கள்), எஸ்சி, எஸ்டி, ஓபிசி, எம்பிசி, பிசிஎம் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40-வது சதவிகிதத்தில் இருந்து 19.424 சதவிகிதமாகவும் (200 மதிப்பெண்கள்) திருத்தப்பட்டுள்ளது.
இந்தத் தளர்வின் மூலம் புதிதாகத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் சென்டாக் இணையதளம் வாயிலாக புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, விருப்பப் பாடப்பிரிவுகளைப் பதிவு செய்து கலந்தாய்வின் மூன்றாம் சுற்றில் (Round 3) பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பங்கள், விருப்பத் தேர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் அக்டோபர் 20 மாலை 5.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது உதவி எண்களான 0413-2655570, 2655571 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

