தமிழ்நாடு

1000 மின்பேருந்துகள் டெண்டர் விவகாரம்: தமிழக அரசின் தடுமாற்ற நிர்வாகத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு (MTC) 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாளே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை நிர்வாக ரீதியான பெரும் தடுமாற்றத்தையே காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டதாகவும், அதன்பின் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக அதன் காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், கடந்த 14-ஆம் தேதி புதன்கிழமை நிர்வாகக் காரணங்களால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த நாளே அந்த ரத்து அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகக் கூறி, ஒப்பந்த நடைமுறை தொடரும் என போக்குவரத்துக் கழகம் அந்தர் பல்டி அடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் எனக் கேள்வி எழுப்பிய அவர், அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் தொடங்கி இயக்குநர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் வரை பல்வேறு படிநிலைகளைக் கடந்துதான் இறுதி செய்யப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார். இதில் எவரேனும் ஒருவர் தவறு செய்யலாமே தவிர, அத்தனை அதிகாரிகளும் எவ்வாறு ஒரே நேரத்தில் தவறு செய்ய முடியும் என்று வினவியுள்ளார். எனவே, இந்த குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணமல்ல, மாறாக கொள்கை முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்களின் தடுமாற்றமே காரணம் என விமர்சித்துள்ளார்.

மேலும், உலக வங்கியுடன் தமிழக அரசு செய்து கொண்ட மொத்த செலவு ஒப்பந்தத்தின் (Gross Cost Contract – GCC) அடிப்படையில் தான் இந்த மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இது அரசுப் போக்குவரத்துக் கழகத்தை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதால், இதனை பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறது. இதே காரணத்திற்காகத்தான் அரசு டெண்டரை ரத்து செய்தது என்றால், அந்த கொள்கை முடிவில் உறுதியாக நின்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்கு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக நிலைத்து நிற்பதும் மிக அவசியம். அதை விடுத்து அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல் முடிவுகளை எடுப்பதும், பின்னர் அதை உடனடியாக மாற்றுவதும் அரசின் நிர்வாகத் திறனுக்குப் பலவீனம் சேர்க்கும். எனவே, வரும் காலங்களிலாவது அரசு அனைத்து விவகாரங்களையும் தீர ஆராய்ந்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன