புதுச்சேரியில் ஒருவர் தலையில் ரூ.65,000 கடன் சுமை: முதல்வர் தலைமையில் டெல்லி சென்று கடன் தள்ளுபடி பெற பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் தலா ரூ.65,000 கடன் சுமை உள்ளதாகவும், முதல்வர் தலைமையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் டெல்லி சென்று மத்திய அரசிடம் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், யூனியன் பிரதேசத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்து முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியின் தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக தனிநபர் கடன் சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், இதனை உடனடியாக தீர்க்காவிட்டால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் நிதிச்சுமையை பெருமளவில் குறைக்கும் வகையில், முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்கு நேரில் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அங்கு பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, புதுச்சேரி அரசுக்கு உள்ள கடன் பாக்கிகளை தள்ளுபடி செய்ய தீவிரமாக வலியுறுத்த வேண்டும் என்று பேரவையில் அவர் கேட்டுக்கொண்டார்.