காரைக்கால் திருப்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கிய எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் மார்க்கெட் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்க்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் அங்குள்ள கடை உரிமையாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் இலவசமாகத் துணிப்பைகளை வழங்கினார்.
தொடர்ந்து கடைக்காரர்களிடம் பேசிய அவர், வாடிக்கையாளர்களுக்குப் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எளிதில் மக்கக்கூடிய மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வரும்போது தங்களது வீடுகளிலிருந்தே துணிப்பைகளைக் கொண்டுவரும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை விளக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், உள்ளாட்சித் துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


