நேபாள நிலச்சரிவில் சிக்கிய தமிழகம், புதுச்சேரி சுற்றுலாப் பயணிகள்: 3 பேர் மீட்பு – மத்திய அரசுக்கு கடிதம்!

புதுச்சேரி: நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ள நிலையில், அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் திருச்சி, சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றனர். கடந்த 23-ஆம் தேதி 3 வேன்களில் அவர்கள் பயணத்தைத் தொடங்கிய நிலையில், நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் சென்றபோது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வாகனங்களும் சிக்கிக் கொண்டன.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த கற்பகம் ராஜமோகன் (62), சிவரஞ்சனி முத்துநாதன் (46), வள்ளிநாயகி சிவகுமார் (61) ஆகிய மூன்று பெண்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு காத்மாண்டு நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய சுற்றுலாப் பயணிகளையும் விரைவாக மீட்டு தாயகம் அழைத்து வர ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


