மறைந்த தலைமை ஆசிரியர் குடும்பத்தினரிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதை வழங்கினார் முதலமைச்சர்!

சென்னை, ஆக. 27: ஒன்றிய அரசின் வீரதீரச் செயலுக்கான 2025-ஆம் ஆண்டிற்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதினைப் பெற்ற மறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர் பி.எஸ்.கெளரிசங்கர் ராஜா அவர்களின் குடும்பத்தினரிடம், அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் வழங்கிச் சிறப்பித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தவர் பி.எஸ்.கௌரிசங்கர் ராஜா. இவரது தன்னலமற்ற வீரதீரச் செயலையும், உயிர்ப் பாதுகாப்பையும் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒன்றிய அரசு 2025-ஆம் ஆண்டுக்கான ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதினை இவருக்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ்.கெளரிசங்கர் ராஜா அவர்களின் மனைவி திருமதி கொ.சிரிஷா அவர்களிடம் இவ்விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.


