லாசுப்பேட்டை குறிஞ்சி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவகொழுந்து
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி லாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதி குறிஞ்சி நகர் பகுதியில் நிலவிய மின்தட்டுப்பாடு மற்றும் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை நீக்க புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 315 கேவி திறன் கொண்ட இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்கள் குறிஞ்சி நகர் சமுதாய நலக்கூடம் அருகிலும், குறிஞ்சி நகர் பத்தாவது குறுக்கு தெருவிலும் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இதிலிருந்து மின் வினியோகம் செய்யும் பணியைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சப்தகிரி சிவகொழுந்து பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலை பொறியாளர் பவித்திரன் நோயல் கம்பன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.
