திருக்கோவிலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

திருக்கோவிலூர்: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் (தெற்கு) மாவட்ட திமுக சார்பில் திருக்கோவிலூரில் பிரம்மாண்ட பேரணி மற்றும் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக மூத்த தலைவரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி தலைமை தாங்கினார்.
திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி தலைமையில் புறப்பட்ட இந்த பேரணியில் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு அண்ணாவின் நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தினர்.



