புதுச்சேரி

போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்ட நடந்து சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன்!

புதுச்சேரி: புதுச்சேரி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடும் போக்குவரத்து நெரிசலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ராஜ்பவன் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் தனது இல்லத்திலிருந்து சட்டப்பேரவைக்கு நடந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நகரின் பிரதான வீதிகளில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வைசியால் வீதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அவர் நடைபயணமாகவே சட்டப்பேரவைக்கு புறப்பட்டு வந்தார்.

பொதுமக்களின் அன்றாட பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு காணவும், போக்குவரத்து சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும் அரசை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதி ஒருவர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை முன்னிறுத்தி சட்டப்பேரவைக்கு நடந்து வந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் கவனத்தைப் பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன