நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பிரதிநிதித்துவம் அவசியம்: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து
புதுச்சேரி, செப். 12:
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயர்சாதியினராகவே உள்ளனர். நீதிபதிகளாகப் பொறுப்பேற்க இதர பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலோ அல்லது பிற மதங்களிலோ திறமையானவர்கள் யாரும் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நீதிபதிகள் நியமன செயல்முறைகள் குறித்து தேவையற்ற சந்தேகங்களை எழுப்புவது எனது நோக்கமல்ல. இருப்பினும், நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்சநீதிமன்றம் உள்ளிட்ட உயரிய நீதிமன்றங்களில் பன்முகத்தன்மையும், அனைத்துத் தரப்பு சமூக மக்களின் முறையான பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்படுவது மிகவும் இன்றியமையாதது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

