தமிழ்நாடு

நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் அச்சுறுத்தல்: ஆளுங்கட்சியினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது எவ்வித அரசியல் குறுக்கீடும் இன்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவிலில் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு உதவி செய்வது போல பாசாங்கு செய்து, ஆளுங்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதன்மை அரசாகச் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியில், ஆளுங்கட்சியினரே பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுவது அதிகரித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் பெண்களுக்கான பாதுகாப்பில் எவ்வித ஆக்கப்பூர்வ முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய அரசு அமைப்புகள் செயலற்றுப் போயுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு முழுமையான நீதி கிடைக்கும் வகையில், தவறிழைத்த நபர் மீது எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் காவல் துறை பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொது இடங்களில் முன்பின் தெரியாத நபர்கள் உதவி செய்வதாகக் கூறினால் எச்சரிக்கையுடன் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும், தற்காப்பு உபகரணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்குமாறும் மாணவிகளுக்கும் பெண்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன