தமிழ்நாடு

கடலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்!

கடலூர்: கடலூர் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல ஆயிரக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் சோதனையானது அப்பகுதி அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கட்டட வரைபடங்களுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் நில வரன்முறைப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, உள்ளே இருந்த பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மேஜைகள், ஆவணக் கோப்புகள், பணப் பைகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பல ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பணம் யாரிடமிருந்து பெறப்பட்டது, எந்தெந்த கோப்புகளுக்கு லஞ்சமாக வாங்கப்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன