புதுச்சேரி

தள்ளுபடி செய்த கல்விக் கடனை திருப்பிக் கேட்கும் அரசு: புதுச்சேரியில் திமுக சிவா கடும் கண்டனம்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட மாணவர்களின் கல்விக் கடன்களை மீண்டும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கூறி பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதற்கு திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ்களை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்த இக்கழகத்தின் மூலம் மத்திய நிதிக் கழகங்களின் சுழற்சி நிதி வாயிலாகக் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் என். ரங்கசாமி, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இக்கழகத்தில் கடன் பெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதற்கான ரூ. 15 கோடி கடன் மற்றும் வட்டித் தொகையைத் தேசிய நிதிக் கழகத்திற்கு மாநில அரசே செலுத்தும் என்று அரசாணையும் வெளியிடப்பட்டு மக்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில், 2013-14 ஆம் ஆண்டு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் அதனை வட்டியுடன் கணக்கிட்டு 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என மேம்பாட்டுக் கழகம் தற்போது ரகசியமாக நோட்டீஸ் அனுப்பி வருவது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விளம்பரம் தேடிக் கொண்ட அரசு, தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் தவறியது ஏன் என்றும், முதல்வரின் உத்தரவிற்குத் துறை சார்ந்த கழகங்கள் மதிப்பளிக்கவில்லையா அல்லது மக்களை ஏமாற்ற வாக்குறுதி அளிக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

படிப்பு முடிந்து உரிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் இளைஞர்கள் மீது, தள்ளுபடி செய்யப்பட்ட கடனை மீண்டும் திணிப்பது பெரும் அநீதியாகும். எனவே, என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு இரட்டை வேடப் போக்கைக் கைவிட்டு, மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து நோட்டீஸ்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். முதல்வர் அறிவித்தபடி மேம்பாட்டுக் கழகத்திற்குத் தேவையான நிதியை அரசே நேரடியாகச் செலுத்தி கடன்களை முழுமையாக ரத்து செய்யாவிட்டால், பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இரா. சிவா எச்சரித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன