மத்திய அரசின் பாராட்டைப் பெற்ற புதுச்சேரி அரசு: தட்டாஞ்சாவடி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்!

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ந.ரங்கசாமி தெரிவித்துள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்து நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “முதியோர் உதவித்தொகை உயர்வு, பண்டிகைக் கால இலவச உணவுப் பொருட்கள் விநியோகம், குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் முற்றிலும் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம். அடித்தட்டு ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளும் மருத்துவம் பயிலும் சூழல் புதுச்சேரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ள நகர்ப்புறப் பகுதிகளுக்குக் கிராமப்புறங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தூய குடிநீர் விநியோகிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 5,000 அரசுப் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்பட்டுள்ளன; எஞ்சிய காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
ஏற்கனவே தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சொன்னதைச் செய்து முடிக்கும் அரசாகத் தங்களது அரசு விளங்கி வருவதாகவும், அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரும் ஆட்சியில் ஆளும் அரசால் மட்டுமே மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், கொள்கையற்று தேர்தல் ஆதாயத்திற்காகக் கட்சி மாறிப் போட்டியிடும் எதிர்க்கட்சியினரை நிராகரித்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
