புதுச்சேரியில் பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: காவல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய ஆலோசனை!

புதுச்சேரி: வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு புதுச்சேரி நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரவும் மேற்கொள்ள வேண்டிய விரிவான நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் காவல்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
புதுச்சேரியில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் கடைவீதிகள், முக்கிய சந்திப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து பலமடங்கு அதிகரிப்பது வழக்கம். இதனை முறையாகக் கண்காணித்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) கலைவாணன், போக்குவரத்துத் துறை மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) திவ்யா, காவல் கண்காணிப்பாளர் (SP) பக்தவச்சலம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர், பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து சீரமைப்புத் திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக, முக்கிய வணிக வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை (Parking zones) கண்டறிந்து அமைப்பது, போக்குவரத்து விதிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே புதுச்சேரி நகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த புதுவை காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 17,672 நபர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போக்குவரத்து எஸ்.எஸ்.பி திவ்யா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்ய காவல்துறை முழு வீச்சில் களமிறங்க வேண்டுமென அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.