புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடி உயர்வு
புதுச்சேரி, அக்டோபர் 19: ஆயுத பூஜையை முன்னிட்டு புதுச்சேரி பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியில் பூக்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டிற்கு கர்நாடகம், கிருஷ்ணகிரி, ஓசூர், மரக்கானம் மற்றும் புதுச்சேரி கிராமப்புற பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. ஆயுத பூஜை திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி பூக்களின் விலையில் பெரிதும் மாற்றம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, மல்லிகை ஒரு கிலோ 1600 ரூபாயாகவும், ரோஜா ஒரு கிலோ 400 ரூபாயாகவும், சாமந்தி ஒரு கிலோ 320 ரூபாயாகவும், அரலிப்பூ ஒரு கிலோ 300 ரூபாயாகவும், செவ்வந்திப்பூ ஒரு கிலோ 600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக கனகாம்பரம் விற்பனைக்கு வரவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் மாலைகளின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்து, சராசரியாக 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாலை தற்போது 200 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.