புதுச்சேரி, காரைக்கால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 ஆம்புலன்ஸ்கள்: எம்.பி. வைத்திலிங்கம் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு!

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவசர மருத்துவப் பயன்பாட்டிற்காக, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.30 கோடி செலவில் 10 புதிய ஆம்புலன்ஸ்களை கொள்முதல் செய்ய மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஆய்வு செய்யும் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் சமீபத்தில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை நகர்ப்புற அரசு மருத்துவமனைகளுக்கு விரைவாக அழைத்துச் செல்வதில் கடும் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி உதவி கோரினர். இந்த அவசியமான கோரிக்கையை கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமுகமாக வலியுறுத்தினர்.
பொதுமக்களின் அவசர சிகிச்சைத் தேவைகளையும், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளையும் பரிசீலித்த எம்.பி. வெ.வைத்திலிங்கம், சுகாதாரத்துறையின் பயன்பாட்டிற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ரூ.1 கோடியே 30 லட்சம் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்தார். இத்தொகையைக் கொண்டு 10 சிறிய ரக ஆம்புலன்ஸ் வாகனங்களை கொள்முதல் செய்து, தேவைக்கேற்ப புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்திய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் பிரித்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ நிர்வாக அனுமதி ஆணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) மூலமாக சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்களை விரைந்து கொள்முதல் செய்து நோயாளிகளின் அவசரப் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறப் பகுதி ஏழை, எளிய நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் பெரிதும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

