புதுச்சேரி சுதானா நகரில் தெருநாய், கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: நல்வாழ்வு சங்கம் தீர்மானம்!
புதுச்சேரி, அக். 13:
புதுச்சேரி சுதானா நகர் நல்வாழ்வு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் பக்தவசலம் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். சங்கத் தலைவர் நடராஜன், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றினர். கூட்டத்தின் முடிவில் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் அப்பகுதி மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. சுதானா நகர் பிரதான ஏரி வாய்க்கால் பகுதியில் கடலூர் சாலையில் இருந்து சுகாதார குடியிருப்பு வரை ஆண்டுதோறும் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டும், வாய்க்காலில் உள்ள சேறு, சகதி மற்றும் மண் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் வீடுகளின் பின்புறம் கடும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பே இந்த வாய்க்காலை முழுமையாகத் தூர்வார வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கடலூர் சாலையில் நைனார்மண்டபம் முதல் முருங்கப்பாக்கம் வரையிலான மேற்குப்புற வாய்க்கால் முழுமையாக அடைபட்டுள்ளதால், லேசான மழைக்கே கடலூர் சாலை மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். அதேபோல் அப்பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்கள் மற்றும் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, சுதானா நகரில் விடுபட்டுள்ள வசந்தம் வீதி, பாவாணர் வீதி 2-வது குறுக்குத் தெரு, தென்றல் வீதி உள்ளிட்ட தெருக்களில் உடனடியாகப் பெயர் பலகைகளை நகராட்சி நிர்வாகம் நிறுவ வேண்டும் என்றும், அமராவதி லைன் பகுதியில் நாள் ஒன்றுக்கு பலமுறை தொடர் மின்தடை ஏற்பட்டு மின்சாதனங்கள் சேதமடைவதால், மின் விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


