தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 15-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை தகவல்!
புதுச்சேரி, அக். 12: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் மற்றும் பருவநிலை ஆர்வலர் ‘டெல்டா வெதர்மேன்’ ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு உகந்த வளிமண்டல சூழல் நிலவி வருகிறது. இதன் அடிப்படையில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வாக்கில் முறைப்படி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போதைய வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த அரசு இயந்திரம் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகிறது.



