புதுச்சேரி

விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்த விவகாரம்: புதுச்சேரியில் பிரபல மதுபானக் கடை மற்றும் உணவகத்திற்கு கலால்துறை அதிரடி சீல்!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கலால் சட்ட விதிமுறைகளை மீறி விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல மதுபானக் கடை மற்றும் உணவகத்திற்கு கலால்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்த தீவிர நடவடிக்கை வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கலால் சட்டம் 1970 மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, மதுபான விற்பனை தொடர்பாக எவ்வித நேரடி அல்லது மறைமுக விளம்பர நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்ற கண்டிப்பான விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இயங்கி வரும் ராஜராஜன் மதுபானக்கடை மற்றும் ராணா ஃபுட் ஸ்டாப் (Atoms Kitchen) ஆகிய வணிக நிறுவனங்கள் இந்த விதிகளை அப்பட்டமாக மீறி விளம்பர பணிகளில் ஈடுபட்டதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன.

இந்தப் புகார்களின் அடிப்படையில் கலால்துறை அதிகாரிகள் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜராஜன் மதுபானக்கடை மற்றும் ராணா ஃபுட் ஸ்டாப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 1970-ஆம் ஆண்டு கலால் சட்ட விதிகளை மீறி முறைகேடான விளம்பர நடைமுறைகளை முன்னெடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உடனடியாக சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

புதுச்சேரி முழுவதும் மதுபானக் கூடங்கள் மற்றும் மதுபான விற்பனை உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு மட்டுமே இயங்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். யூனியன் பிரதேசத்தின் சட்ட விதிமுறைகளை மீறி எவரேனும் விளம்பரங்கள் செய்தாலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டாலோ அவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை தொடரும் என்றும் கலால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன