புதுச்சேரி ஜிப்மரில் ரூ.80,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவ நிறுவனத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் நல ஆராய்ச்சித் திட்டத்தில் காலியாக உள்ள ‘ப்ராஜெக்ட் ரிசர்ச் சயின்டிஸ்ட்-II (நான்-மெடிக்கல்)’ பணியிடத்திற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் முதியோருக்கான சுகாதாரத் தொகுப்பைச் செயல்படுத்துவது தொடர்பான இந்த ஆய்வானது, ஜிப்மர் மருத்துவத் துறை மற்றும் முதியோர் நல மருத்துவப் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியமாக ரூ.80,400 (அடிப்படை ஊதியம் ₹67,000 + 20% வீட்டு வாடகைப்படி) வழங்கப்படும். தொடக்கத்தில் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் இருக்கும் என்றும், பணித்திறன் அடிப்படையில் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது முனைவர் பட்டம் (Ph.D) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது சுகாதாரம் (MPH) அல்லது சமூகம் சார்ந்த சுகாதார ஆராய்ச்சித் திட்டங்களில் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழுமையான சுயவிவரக் குறிப்பு (CV) மற்றும் கல்விச் சான்றிதழ்களை `smarticmr@gmail.com` என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்டோபர் 15, 2026-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதி பெறுபவர்களுக்கு வரும் அக்டோபர் 22, 2026 அன்று காலை 9 மணிக்கு எழுத்துத் தேர்வும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பிற்பகல் 3 மணி முதல் நேர்முகத் தேர்வும் ஜிப்மர் வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)







