புதுச்சேரி

நடக்க முடியாத நிலையிலும் வீல்சேரில் வந்து வாக்களித்த 82 வயது மூதாட்டி: புதுச்சேரியில் நெகிழ்ச்சி!

புதுச்சேரி, அக். 6: ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் உடற்பிணியும் தடையல்ல என்பதை உணர்த்தும் விதமாக, புதுச்சேரியில் 82 வயது மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழில் மற்றும் வணிகத்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி சகுந்தலா வீல்சேரில் அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப் படையினர் மற்றும் தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் அவர் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கைச் செலுத்தினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி சகுந்தலா உருக்கமாகப் பேசுகையில், ‘காலில் உள்ள எலும்புகள் அனைத்தும் தேய்ந்துவிட்ட நிலையில் தன்னால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், முதுமை வாட்டினாலும் நமது ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் வீல்சேரில் வந்து வாக்களித்தேன். தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செய்ய வேண்டும்’ என்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன