புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 80.81% வாக்குகள் பதிவு – கடந்த தேர்தலை விட 6.29% சரிவு!
புதுச்சேரி, அக். 06: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியான முறையில் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 80.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக 80.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 6.29% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
