தமிழ்நாடு

திருவள்ளூர் அரசுப் பள்ளி விளையாட்டு சாதனை மாணவ-மாணவிகளுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் பாராட்டு!

சென்னை: திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த விளையாட்டு சாதனை மாணவ, மாணவிகளை பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் சஞ்சய் (S. Sanjay), நீச்சல் போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். குறிப்பாக, 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (Breast Stroke) பிரிவில் தென் மண்டல தேசிய அளவில் வெண்கலப் பதக்கமும், RDS மற்றும் BDS மாநில அளவிலான போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். மேலும், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மாவட்ட அளவிலான சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து பெருமை சேர்த்துள்ளார்.

அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராஜலட்சுமி (S. Rajalakshmi), மல்யுத்தப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 70-வது SGFI தேசிய அளவிலான போட்டிக்கான தமிழ்நாடு அணிக்குத் தேர்வாகியுள்ளார். அதுமட்டுமின்றி, நீச்சல் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்று மாவட்ட அளவில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி வருகிறார்.

அரசுப் பள்ளிப் பின்னணியில் இருந்து கொண்டு தங்களது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அபார திறமையின் மூலம் விளையாட்டுத் துறையில் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டு வரும் இந்த இளம் சாதனையாளர்களை நேரில் பாராட்டிய நயினார் நாகேந்திரன், எதிர்காலத்தில் இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் மேலும் பல வெற்றிகளைக் குவித்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். இந்த நிகழ்வின் போது விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி உடனிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன