புதுச்சேரி

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

புதுச்சேரி, அக். 04: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கருணாஸுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் முத்தியால்பேட்டை போலீஸார் போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த ‘காக்கா’ என்ற கருணாஸ் (20) மற்றும் விவேகானந்தன் (56) ஆகியோரை கைது செய்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், கடந்த 2024 செப்டம்பரில் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை உறுதி செய்வதற்கான அரசுத் தரப்பு மனு மற்றும் தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளி கருணாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகியவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என உறுதி செய்தனர். இருப்பினும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தூக்கு தண்டனை விதிப்பதற்கான அரிதிலும் அரிதான வரையறை, குற்றவாளியின் வயது, அவரது சூழ்நிலை மற்றும் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கை விரைவாகவும் முழுமையாகவும் விசாரித்த புதுச்சேரி காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன