புதுச்சேரி பாஜகவில் திரளாக இணைந்த டி.வி. நகர் இளைஞர்கள்: வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியினால் ஈர்க்கப்பட்டு, புதுச்சேரி டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையொட்டி நடைபெற்ற மாபெரும் கட்சி இணைப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பாஜக இளைஞர் அணியின் மாநில தலைவர் ஆடலரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் (எ) முகுந்தன் மற்றும் சூர்யா ஆகியோர் தலைமையில் அப்பகுதி இளைஞர்கள் முறைப்படி கட்சியில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்களை வரவேற்றுப் பேசிய வி.பி.ராமலிங்கம், டிவி நகர் பகுதியில் தொடர்ந்து சமூக சேவையாற்றி வரும் இளைஞர்கள் உலகின் மிகப்பெரும் பேரியக்கமான பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதற்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பாஸ்கர் பங்கேற்று, புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மேலும், இளைஞர் அணியின் மாநில பொதுச் செயலாளர் அமுல்ராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினை நகர மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் மற்றும் நகர மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தொடர்ந்து டி.வி. நகர் பகுதி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தலைவர்கள் வழங்கினர். முன்னதாக வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அப்பகுதி இளைஞர்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


