சென்னையில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கல்!

சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாநில அளவிலான நினைவுப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இப்போட்டியின் முடிவில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ். தமிழ் மகள் முதலிடம் பிடித்து ரூ. 1,00,000 ரொக்கப்பரிசைத் தட்டிச் சென்றார். தொடர்ந்து, தஞ்சை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ். பவித்ரா இரண்டாம் பரிசுக்கான ரூ. 60,000 ரொக்கப்பரிசையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் எம். கே. ஹரிநீஷ் மூன்றாம் பரிசாக ரூ. 40,000 ரொக்கப்பரிசையும் பெற்றனர். விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். மது நிலா நான்காம் பரிசாக ரூ. 30,000 ரொக்கப்பரிசை வென்றார்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா மற்றும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுக் கோப்பைகளையும் காசோலைகளையும் வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
காலையில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஆகியவற்றை நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே. சந்திரசேகரன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தாம்பரம் கே. நாராயணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

