வகுப்பு நேரத்தில் போராட்டம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை: புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் எச்சரிக்கை சுற்றறிக்கை!

புதுச்சேரி, செப். 28: புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் வகுப்பு நேரங்களில் மாணவர்கள் எவ்வித வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்றும், மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் (Principal i/c) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் (Circular No.53/2026/AGLC/), “கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்பு நேரங்களில் நடைபெறும் எந்தவொரு வேலைநிறுத்தம் அல்லது போராட்டங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பிற மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டுவதோ அல்லது அதற்குத் துணை போவதோ கூடாது.”
“இந்த உத்தரவுகளை மீறி செயல்படும் மாணவர்களுக்கு அன்றைய தினத்திற்கான வருகைப் பதிவு (Attendance) வழங்கப்பட மாட்டாது. அத்துடன் அவர்கள் மீது கல்லூரி விதிகளின்படி கடுமையான துறைசார் ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் கல்விச் சூழல் மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

