சபாநாயகர் பிரச்சாரம் செய்யக் கூடாதென சட்டம் உள்ளதா? நிரூபித்தால் பதவி விலகத் தயார்: அன்பழகன் பகிரங்க சவால்!
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து, அதிமுக மாநில செயலாளரும் தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மோகன் நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
வாக்கு சேகரிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தலில் சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் சட்ட விதிகளில் ஏதேனும் உள்ளதா? அவ்வாறு சட்டம் இருப்பதாக நிரூபித்துக் காட்டினால் நான் எனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.”
“ஒருவேளை அவ்வாறு நிரூபிக்க முடியவில்லை என்றால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுக மாநில அமைப்பாளர் சிவா தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?” என்று நேரடியாகச் சவால் விடுத்தார். இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் இந்த அனல் பறக்கும் பிரச்சாரமும் சவால்களும் புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.