காரைக்கால் பூவம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு–கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூவம் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவ–மாணவிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர். இதில் நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் வி. விக்னேஸ்வரன், MBBS கலந்துகொண்டு மாணவ–மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அரசு வழங்கும் கல்விசார் நலத்திட்டங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
இவ்விழாவில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பள்ளி மாணவர்களின் போக்குவரத்து சிரமங்கள் பெருமளவில் குறையும் எனப் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



