புதுச்சேரி நெல்லித்தோப்பில் வாலிபர் கழுத்தை நெரித்துக் கொலை: இருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!
புதுச்சேரி, செப். 24:
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் ஜாபர் பாய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சேதுவின் மனைவி பூங்கோதை (48). இவருடைய மகன் சுரேஷ்குமார் (27). இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் சோபாவில் சுரேஷ்குமார் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரம்பத்தில் இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறாய்வு அறிக்கையில் சுரேஷ்குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றம் செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் முன்விரோதம் அல்லது வாய்த்தகராறு காரணமாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்துக் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சம்பவ நேரத்தில் அப்பகுதியில் பதிவான செல்போன் டவர் எண்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படையினர் சென்னை மற்றும் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
