மீனவர்களுக்கு கூடுதல் நலத்திட்டங்கள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் துறை அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில், தகுதியுள்ள கூடுதல் மீனவர்களுக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அத்துடன், கடலில் தொழில் புரியும்போது எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.2 லட்சம் வழங்க வகை செய்யும் கோப்புகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மீனவர்களின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கு ஏதுவாக, மத்திய மீன்வள அமைச்சகத்தின் உரிய ஒப்புதலை விரைந்து பெற்று திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டார்.

