உப்பனாறு வாய்க்காலில் குப்பை அடைப்புகளை உடனடியாக அகற்றுக: அதிகாரிகளுக்கு சபாநாயகர் அன்பழகன் உத்தரவு
புதுச்சேரி, செப். 22:
புதுச்சேரி உப்பளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில் அளவுக்கு அதிகமாகக் குப்பைகள் தேங்கியுள்ளதால் கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் பொதுமக்களுக்குத் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தொகுதி எம்.எல்.ஏ.-வும் தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், தனியார் தூய்மைப் பணி நிறுவனமான கிரீன் வாரியர்ஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய சபாநாயகர், “உப்பனாறு வாய்க்கால் கரையோரப் பகுதிகளில் போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால், பொதுமக்கள் குப்பைகளை வாய்க்காலிலேயே கொட்டுகின்றனர். மேலும் கிரீன் வாரியர்ஸ் நிறுவனம் முறையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததால் சேறும் சகதியுமாக மாறி நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக அப்பகுதியில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைத்து, பொதுமக்கள் கழிவுகளைக் கால்வாயில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், தேவையான இடங்களில் உடனடியாகக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உப்பனாறு வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படாமல் கண்காணிக்கப்படும் என்றும், தற்போது ஏற்பட்டுள்ள அடைப்புகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து, இந்தத் தூய்மைப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் அதிகாரிகளுக்குக் கெடு விதித்து உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உள்ளாட்சி செயற்பொறியாளர் ராமநாதன், நகராட்சி உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ஆர்த்தி, இளநிலைப் பொறியாளர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
